கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது குறித்து அவருடைய மனைவி அளித்துள்ள பேட்டியில், “எங்களுடைய குடும்பம் முழுவதும் விஜயின் தீவிர ரசிகர்கள். விஜய் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து என்னுடைய கணவர் அவருடைய ரசிகர். கடந்த 27ஆம் தேதி பிரச்சாரம் நடைபெறுவதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி சென்றவர்தான் இப்போது வரை வீடு திரும்பவில்லை. எங்கு இருக்கிறா?ர் என்ன செய்கிறார்? என்பது தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் வந்தது. நானும் விஜயின் தீவிர ரசிகை. பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு நானும் என்னுடைய இரண்டு மகன்களும் சென்றிருந்தோம்.
விஜய் பிரச்சாரத்திற்கு வரும் வரை அங்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவர் பிரச்சார வாகனம் வந்து நின்று பேச ஆரம்பித்த பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது. செருப்பு வீசுவது, ஒருத்தரை ஒருத்தர் தள்ளி விடுவது அடிப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்தது. உண்மையில் விஜய்யின் உண்மையான தொண்டர்கள் அப்படி செய்ய வாய்ப்பில்லை. வேண்டுமென்றே ஒரு கும்பலை உள்ளே இறக்கிவிட்டு அதை நடத்தியது போல தான் இருந்தது. என்னையும் அருகில் இருந்த சாக்கடை பள்ளத்தில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மிகவும் சிரமப்பட்டு தான் தப்பித்து வந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று தான் வீடு திரும்பினேன். என்னுடைய கணவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததே தவிர அது தொடர்பான வீடியோ எதுவும் வரவில்லை. பிரச்சாரம் முடிவதற்கு முன்பு வரை எங்களிடம் பேசிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் இப்போது வரை எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரை போலீசார் பயங்கரமாக தாக்குவார்களோ என்று பயம் உள்ளது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோள் தான் வைக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்திருக்கிறீர்கள்? அவர் எப்படி இருக்கிறார்? என்பதை மட்டும் சொல்லுங்கள். என்னுடைய கண்ணில் அவரை காட்டுங்கள்” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
