தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம் ஹன்மாஜிபேட் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதுடைய கூலித்தொழிலாளி காஷிராம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சவிதாவுக்கும் திருமணம் நடந்து தனித்தனியாக வசித்து வந்தனர். காஷிராமின் வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது தம்பி முறை உறவினரான சந்தோஷ் அடிக்கடி வந்து சென்றதால், அவருக்கும் சவிதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. சந்தோஷுடன் சேர்ந்து வாழ நினைத்த சவிதா, அதற்குத் தடையாக இருந்த கணவர் காஷிராமைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், காஷிராமிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ராமு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காஷிராம் மீது தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைத்த ராமுவும், சவிதாவும், சந்தோஷும் சேர்ந்து அவரை கொலை செய்யக் கூட்டுச் சதி செய்தனர். கடந்த அக்டோபர் 23ஆம் தேதி சந்தோஷ், காஷிராமை மது அருந்தச் செல்வதாகக் கூறி பச்சிர ஏரி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே காஷிராம் போதையில் சுயநினைவின்றி கிடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தோஷும் ராமுவும் இணைந்து நைலான் கயிற்றால் காஷிராமின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்ததோடு, அவரது உடலை ஏரியிலும் வீசிவிட்டுத் தப்பியோடினர். இதற்கிடையே காஷிராமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, ஏரியில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்தின் பெயரில் சந்தோஷைப் பிடித்து விசாரித்தனர். கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அவர் அளித்த தகவலின் பேரில் ராமு மற்றும் சவிதா ஆகியோரைக் கைது செய்து விசாரித்ததில், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே திட்டமிட்டு கணவனைக் கொன்ற திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
