ஒடிசாவை சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்ற கட்டிட தொழிலாளியின் முதல் மனைவி உயிரிழந்து விட்ட நிலையில் இரண்டாவதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி (36) என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுடைய வாழ்க்கைக்கு மது எமனாக மாறியது.
இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் ஜோடியாக அமர்ந்து குடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் போதை அதிகமானதும் அடிதடி சண்டை வந்துள்ளது. உடனே அந்த நபர் தனது மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் உயிருக்கு போராடிய பிங்கி திடீரென்று அருகில் இருந்த கத்தியை எடுத்து சர்தாரின் கழுத்தில் குத்திவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் கத்தி குத்தப்பட்ட இடத்திலிருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் மீண்டும் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சர்தார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கணவனை கத்தியால் குத்திய பிங்கியை கைது செய்துள்ளனர்.
