ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்மவரம் பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதுடைய கோட்டிரெட்டி. கிராமப்புற மருத்துவ பயிற்சியாளராக (RMP) பணியாற்றி வந்த இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், பிரக்யா (20) என்ற மகளும் உள்ளனர். கோட்டிரெட்டி மருத்துவ தொழிலுக்காக வரும் பல பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதும் செல்போனில் மூழ்கிக்கிடந்த அவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த ஆதிலட்சுமி, இதுகுறித்து தட்டிக்கேட்டபோது தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ளாத கோட்டிரெட்டி, மாறாக மனைவி ஆதிலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். பலமுறை எச்சரித்தும், அறிவுரை கூறியும் கோட்டிரெட்டி தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்காகத் தனது மகள் பிரக்யா மற்றும் ஒரு உறவினரின் உதவியை அவர் நாடியுள்ளார்.
திட்டமிட்டபடி கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு, பணி முடிந்து வீடு திரும்பிய கோட்டிரெட்டிக்கு ஆதிலட்சுமி பாயாசத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அதனை அருந்திய சிறிது நேரத்தில் கோட்டிரெட்டி மயக்கமடைந்தார். அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஆதிலட்சுமி, மகள் மற்றும் உறவினருடன் சேர்ந்து கட்டையால் கோட்டிரெட்டியை சரமாரியாக அடித்துக் கொலை செய்தார். பின்னர் விடியற்காலையில் போலீசாருக்கு போன் செய்து, அடையாளம் தெரியாத கும்பல் வீட்டிற்குள் புகுந்து தனது கணவரைக் கொன்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோட்டிரெட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அன்றிரவு வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் வந்ததற்கான தடையங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆதிலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, கணவனின் டார்ச்சர் மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் மகளுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
