திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொல்ல குப்பத்தைச் சேர்ந்த குமார் (40) என்ற மதுவுக்கு அடிமையான நபர், தொடர்ந்து மனைவி ரம்யாவிடம் (35) தகராறு செய்து சித்திரவதை செய்து வந்துள்ளார். நேற்று இரவும் குடிபோதையில் தகராறு செய்ததால், ஆத்திரமடைந்த ரம்யா வீட்டில் இருந்த வெட்டுக்கத்தியால் குமாரின் கழுத்தில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ரம்யா வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.
இதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வாணியம்பாடி பாரத் நகரில் உள்ள மூடப்பட்ட கல்குவாரி குட்டையில் காயங்களுடன் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த சசிகலா என்பதும், சொத்துக்கள் அவர் பெயரில் இருந்ததால் பணம் கேட்டு தகராறு செய்த அவரது கணவர் அசோகன் மற்றும் மருமகன் அஸ்லாம் ஆகியோர் இக்கொலையைச் செய்தது தெரியவந்தது.
கொலை செய்த பின் சசிகலாவின் உடலை 100 கி.மீ தொலைவு வாகனத்தில் எடுத்து வந்து, கல்லைக் கட்டி கல்குவாரி நீரில் வீசியுள்ளனர். மேலும் சந்தேகத்தைத் தவிர்க்க மனைவியைக் காணவில்லை என அசோகன் போலீசில் பொய் புகாரும் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அசோகன் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.
