ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது பெற்றோரையும் மகனையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளுமாறு மனைவியிடம் அறிவுறுத்திவிட்டு, நண்பர்களுடன் ஹரித்வாருக்கு கன்வாட் யாத்திரை புறப்பட்டார். ஆனால், கணவர் வீட்டை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்தப் பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இந்தத் தகவல் தெரிந்ததும், டெல்லியை அடையும் முன்பே அந்த இளைஞர் தனது கன்வாடை நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு அவசர அவசரமாக வீட்டிற்குத் திரும்பினார். ஓட்டம் பிடித்த மனைவி, வீட்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் ரொக்கம், நகைகள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாயமான பெண்ணின் செல்போன் இருப்பிடத்தை வைத்து அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரையிலும் யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை என்ற போதிலும், குடும்பப் பொறுப்புகளை மறந்து பெண்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
