உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், புதிய செல்போன் வாங்குவதற்கு கணவர் பணம் தராததால் விரக்தியடைந்த 24 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராதிகா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஷிஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். வீடு வீடாகத் துணி வியாபாரம் செய்யும் ஆஷிஷ், தற்போது வேலை நிமித்தமாக ஒடிசாவில் தங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை ராதிகா தனக்கு ₹10,000 மதிப்பிலான புதிய மொபைல் போன் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஆஷிஷ் தன்னிடம் தற்போது போதிய பணம் இல்லை எனக் கூறி, உடனடியாக ₹2,000 மட்டும் அனுப்பிவிட்டு மீதித் தொகையைத் பிறகு தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஆயினும், கணவர் கேட்ட பணத்தை முழுமையாகத் தராததால் மனமுடைந்த ராதிகா, அடுத்த நாள் காலை சுமார் 11 மணியளவில் தனது வீட்டின் கால்நடை கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ராதிகாவின் 2 வயது மகன் வான்ஷ் நீண்ட நேரமாக அழுதுகொண்டே இருந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோதுதான் இந்தத் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இது குடும்பத் தகராறு அல்லது வரதட்சணை கொடுமையால் நடந்த கொலையா என்ற கோணத்தில் விசாரித்த போலீசார், இறுதியில் இது பண விவகாரத்தால் ஏற்பட்ட தற்கொலைதான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
