உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியை தாக்கியதில் மாணவர் ஒருவருக்குக் கண் பார்வை பறிபோன அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேவ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் வன்ஷ் என்ற 14 வயது மாணவர், வகுப்பறையில் கீழே விழுந்த பேனாவை எடுக்க குனிந்தபோது, ஆசிரியை அவரைத் தண்டிக்கக் கோலால் அடித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் கோல் மாணவரின் வலது கண்ணில் பலமாக குத்தியதில் ரத்தம் வழிந்து தீவிர காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த மாணவரைப் பள்ளி நிர்வாகம் முறையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், கிராமத்து மருத்துவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வலி அதிகமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவருக்கு, கண் திரை கிழிந்து ‘கறுப்பு கண்புரை’ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்தும் மாணவருக்கு ஒரு கண்ணில் பார்வை திரும்பவில்லை. இது தொடர்பாக ஆசிரியை உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய வன்முறைச் செயல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
