CINEMA
எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்த போது சிவாஜி பார்க்க சென்றதன் காரணம் இதுதானா?
தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
அதே காலகட்டத்தில் நடிகர் திலகமாக உருவாகி எம் ஜி ஆரின் போட்டியாளராக இருந்து தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார் சிவாஜி. எம் ஜி ஆரைப் போலவே சிவாஜியும் அரசியலுக்கு வந்தாலும், அவரால் எம் ஜி ஆர் போல வெற்றி பெற முடியவில்லை.
தமிழ் சினிமாவில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தது போலவே, அரசியலிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்தனர். சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். எம் ஜி ஆரோ, திமுகவில் தீவிரமாக இயங்கி சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் அதிமுகவைத் தொடங்கி முதல்வராகவும் ஆனார். ஆனாலும் அவர்களுக்குள் ஆழமான நட்புணர்வு இருந்தது. தன்னை விட மூத்தவரான எம் ஜி ஆரை, சிவாஜி அண்ணே என்றுதான் பாசத்தோடு அழைப்பாராம். அதே போல எம் ஜி ஆர், தம்பி கணேசா என்று அழைப்பாராம்.
இந்நிலையில் எம் ஜி ஆர் உடல் நலமில்லாமல் இருந்த போது அவர் அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்றார். அப்போது அவரைப் பார்க்க சென்றவர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது எம் ஜி ஆர் சிவாஜிக்கு ஏதோ முக்கியப் பொறுப்பு ஒன்றைக் கொடுக்க நினைத்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் சிவாஜி கணேசன் தன்னுடைய சுயசரிதையில் ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதில் “அமெரிக்காவில் இருந்து கடிதம் எழுதி, என்னை அங்கு வரசொன்னதே எம் ஜி ஆர் அண்ணன்தான். அவர் சொன்னதால்தான் நான் சார்டட் பிளைட்டில் சென்று அவரைப் பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.