“அக்கவுண்ட் செக் பண்ணுங்க மக்களே!”..யார் யாருக்கு ₹3500? யார் யாருக்கு ₹4000?முதல்வர் ஸ்டாலின் போட்ட ‘இன்ப அதிர்ச்சி’ ஆர்டர்!

By Muthu Mani on பங்குனி 3, 2026

Spread the love

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மார்ச் மாதத்திற்கான சிறப்பு நிதியை இன்று வழங்கியுள்ளார். ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை நம்பி இருக்கும் பிற பிரிவினரும் தங்களுக்கு இத்தகைய சிறப்பு நிதி வேண்டுமென விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பயன்பெற்று வரும் சுமார் 29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு தலா 3,200 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 3,500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா 4,000 ரூபாயும் இன்று காலை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி வரவு குறித்துப் பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

இவை தவிர, மீனவர் சமூகத்தினரின் நலன் கருதி, மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக 1,62,900 குடும்பங்களுக்கு தலா 8,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகளின் நலனுக்காக, பசுந்தேயிலை கொள்முதலுக்குக் கிலோவுக்கு 2 ரூபாய் வீதம் மொத்தம் 8.53 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. நலிந்த பிரிவினரின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் வகையில் இந்த நிதி உதவிகள் நேரடியாகப் பயனாளிகளின் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளன.

   

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்களின் நம்பிக்கைக்குரிய கோரிக்கைகளை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருவதாகவும், குறிப்பாகச் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்போரின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசின் இந்த அதிரடி நிதி உதவித் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது