“சசிகலா, ஓபிஎஸ், கருணாஸ்”… ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் ஸ்கெட்ச்… அதிமுக கோட்டையைத் தகர்க்கும் திமுகவின் ‘மைக்ரோ’ பிளான்….!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமை இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூக மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் ‘மைக்ரோ லெவல்’ அரசியல் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கடந்த தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தென் மண்டலத்தில், இந்த முறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த திமுக முனைப்பு காட்டி வருகிறது.

கடந்த 2016 தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கையாண்ட அதே பாணியை தற்போது ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் சாதிய முரண்பாடுகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் உள்ள தென் மாவட்டத் தலைவர்களைத் தன் பக்கம் இழுப்பதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியில் ஓட்டை போட திமுக முயல்கிறது.

   

இந்த வியூகத்தின் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. முக்குலத்தோர் சமூகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் ஓபிஎஸ் மற்றும் கருணாஸ் போன்றவர்களை ஒருங்கிணைத்து, எடப்பாடி பழனிசாமி அந்தச் சமூகத்திற்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்க திமுக திட்டமிட்டுள்ளது. வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கருணாஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

மறுபுறம் சசிகலாவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தனது காய்களை நகர்த்தி வருகிறார். இதனால் தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு சரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் மற்றும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்திருந்தாலும், திமுகவின் இந்த நுணுக்கமான அரசியல் நகர்வுகள் அவர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மண்டலத்தின் 58 தொகுதிகளே ஆட்சியைத் தீர்மானிக்கும் என்பதால், அங்கு திமுகவின் ‘மைக்ரோ பிளான்’ எந்தளவுக்குப் பலன் தரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.