“விஜய் அரசின் அதிரடி அறிவிப்பு… பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடைக்கும்..? வெளியான முக்கிய நிபந்தனைகள்…!”

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணையில் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை பெறப்பட்டு நிலுவையில் உள்ள தகுதியான பயிர்க்கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி, ரூ.75 ஆயிரம் வரை பெற்றவர்களுக்கு முழுமையாகவும், அதற்கு மேல் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையிலும் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. மேலும், முறையான ஆவணங்களுடன் (சிட்டா, பட்டா, அடங்கல்) பெறப்பட்ட வேளாண் நகைக் கடன்கள் மட்டுமே இதற்குத் தகுதி பெறும் என்றும், வேளாண்மை சாராத நகைக் கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வரசாணையின்படி தள்ளுபடி பெறுவதற்குப் பல கடுமையான கட்டுப்பாடுகளும், விதிவிலக்குகளும் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற கடன்களுக்கு இத்தள்ளுபடி பொருந்தாது. நில உரிமையாளர்களைத் தவிர்த்து, முறையாக நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிடும் குத்தகை விவசாயிகளுக்குப் பரப்பளவின் அடிப்படையில் இச்சலுகை அனுமதிக்கப்படும். அதேபோல, அரசாணை வெளியாவதற்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்களும், கூட்டுறவு வங்கிகளின் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட கூடுதல் கடன்களும் தள்ளுபடிக்குத் தகுதி பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இவற்றுடன் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு விவசாயி ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களில் கடன் பெற்றிருந்தாலும் அல்லது ஒரே குடும்பத்தில் பலர் கடன் பெற்றிருந்தாலும், தனிநபர் அடையாள எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணின் அடிப்படையில் ஏதேனும் ஒரு கடனுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனைகள் மற்றும் அடுக்குமுறை தள்ளுபடி திட்டத்திற்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.