இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது ஊடகவியலாளர்களை நோக்கி நடுவிரலை காட்டி ஆபாச சைகை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வாலுக்கும் சியாவுக்கும் வரும் நவம்பரில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தனது காதலன் சேதன் சௌத்ரியுடன் சேர்ந்து சியா இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சியாவின் இந்த அநாகரிகமான செயல் மற்றும் செய்த குற்றத்திற்காகச் சிறிதும் குற்ற உணர்ச்சியற்ற அவரது மனநிலை சமூக ஊடகங்களில் கடுமையான விவாதங்களையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், லோஹாகட் கோட்டையின் செங்குத்துப் பாறையிலிருந்து கேதனை எப்படிக் கீழே தள்ளிப் படுகொலை செய்வது என்பது குறித்து சியாவும் சேதனும் முன்கூட்டியே ஒத்திகை பார்த்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதத்தில், லுல்லாநகர் அருகிலுள்ள ஒரு குன்று பகுதியில் இதற்கான ஒத்திகையை அவர்கள் நடத்தியுள்ளனர். சமீபத்தில் விசாரணைக்காக அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சியா, தாங்கள் ஒத்திகை பார்த்த துல்லியமான இடத்தை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டியுள்ளார். இந்த திட்டமிட்ட படுகொலைக்கான கூடுதல் ஆதாரங்களையும், துல்லியமான தேதிகளையும் சேகரிக்கும் பணியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த இரு குற்றவாளிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி புனே ஊரகக் காவல்துறை வட்கான் மவல் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதற்கிடையே, இறப்பதற்கு முன்னதாகவே சியா மற்றும் சேதனின் அதிக்கப்படியான நெருக்கம் குறித்து கேதன் தனது தந்தையிடம் அச்சத்தையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியதாக அவரது தந்தை விஷால் அகர்வால் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். தங்களின் காதலுக்குத் தடையாக இருந்ததால் கேதனைக் கொன்றதாகக் குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நீதிமன்ற சம்மதத்துடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.
