மகாசமுந்த் மாவட்டத்தைச் சேர்ந்த தீபேஷ் படேல் (35) என்பவருக்கும், தம்தரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை நன்றாகச் சென்றாலும், காலப்போக்கில் இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 14 அன்று தீபேஷின் மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் வருத்தமடைந்த தீபேஷ், அவரை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜூன் 20 அன்று சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணித்து தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது மனைவியிடம் பேசி, மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மிகவும் கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால், கணவனுடன் மீண்டும் வாழ அவரது மனைவி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
மனைவி தன்னுடன் வர மறுத்ததால் உளைச்சலுக்கு ஆளான தீபேஷ், மாமியார் வீட்டின் அருகே இருந்த ஒரு வெற்றிலை பாக்கு கடைப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மகர்லோட் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், தீபேஷுக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், மனைவியின் நடத்தை மீது அவர் சந்தேகம் கொண்டதால் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
