கார்த்திகை மாதம் என்றாலே தீபங்களுக்கு சிறப்பான மாதம் என்பது போல சிவனுக்கும் மிகவும் சிறப்பானது. பலவித பூஜை புனஸ்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெறும் மாதமாகும். கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் சிவாலயங்களில் சோமவார பூஜை சிறப்பாக நடைபெறும். அந்த நேரத்தில் தான் இந்த சங்காபிஷேகமும் நடைபெறும். எதற்காக இந்த சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இந்து மதத்தில் சங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சங்கு தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்யப்படுவது தான் சங்காபிஷேகம். சங்கை நம் காதில் வைத்து உற்று கேட்டால் ஒரு இரைச்சல் போன்ற சத்தம் கேட்கும். ஆனால் அது இரைச்சல் அல்ல பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார ஸ்ருதியான ஓம்காரம் என்ற ஒலியாகும். உன்னிப்பாக கேட்டால் அந்த ஓம் என்ற சத்தம் நமக்கு கேட்கும். பிரபஞ்ச ஒலியை வெளிப்படுத்துவதால் அது விசேஷமாக பார்க்கப்படுகிறது.
சிவபெருமான் அபிஷேக பிரியர். அதுவும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால் ஆனந்தம் அடைந்து இந்த உலகம் மகிழ்வித்து இருக்க அருள் ஆசி புரிவார். கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமை சோமவாரம் ஆகும். இந்த சோமவாரத் தினத்தில் ஒவ்வொரு சிவாலயங்களிலும் 108 1008 என சங்குகளை வரிசைப்படுத்தி வைத்து அதில் புனித நீர் நிரப்பி அந்த தீர்த்தத்தை கங்கையாக பாவித்து சங்காபிஷேகம் செய்வார்கள். சங்கு செல்வத்தின் சின்னம் வற்றாத பொருள் செல்வம் வேண்டி விரும்புபவர்கள் இந்த சங்காபிஷேக பூஜையை செய்கிறார்கள்.

சங்கினுள் புனித நீர் தவிர பால் பன்னீர் பஞ்சகவ்யம் போன்றவற்றை நிரப்பியும் அபிஷேகம் செய்யலாம். கார்த்திகை மாதத்தில் சிவபெருமான் அக்னி பழம்பாக இருப்பார். அவரை குளிர்விக்கும் பொருட்டே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். கார்த்திகை மாதம் சிவபெருமானை தீப ஒளியால் மகிழ்விப்பது போலவே சங்காபிஷேகம் செய்து குளிர்விக்க செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது உலகிற்கு பலவித நன்மைகளை வழங்குவார். சங்க அபிஷேகத்தை கண்ணால் பார்ப்பதே மிகவும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை பருகும் போது நம் உடல் நிலை சமநிலை அடையும். நம்மை அண்டியிருக்கும் தோஷம் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
