மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகேயுள்ள ஈசாகர் பகுதியில் உள்ள ஓடிலா கிராமத்தில், கோலாகலமாகத் தொடங்கப்பட்ட திருமண விழா ஒன்று எதிர்பாராதவிதமாகப் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, இரு வீட்டாருக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, மணமேடையில் மணமக்கள் ஏழு அடி எடுத்து வைக்கும் (ஃபெராஸ்) முக்கிய சடங்கும் தொடங்கியுள்ளது. அதில் இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில், திடீரென இரு குடும்பத்தினரும் இந்தத் திருமணத்தை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இந்தத் திருமண முறிவு குறித்து மணமகள் வீட்டார் கூறுகையில், மணமகனும் மணமகளும் ஒரே ‘கோத்திரத்தைச்’ சேர்ந்தவர்கள் என்பது சடங்கின் போதுதான் தெரியவந்தது என்றும், ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணன்-தங்கை முறை என்பதால் இந்தத் திருமணத்தை நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், மணமகன் வீட்டாரோ முற்றிலும் மாறுபட்ட ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். தாங்கள் திருமண ஊர்வலத்திற்கு (பாரத்) ஜீப் அல்லது பேருந்துகளில் வராமல், டிராக்டரில் வந்ததால் தங்களை அவமதிக்கும் நோக்கில் மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இருப்பினும், மணமகள் வீட்டார் கூறும் கோத்திரக் காரணம் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மணமகன் மற்றும் மணமகளின் கோத்திரங்கள் ஒன்றுதான் என்ற சந்தேகம் மணமகள் வீட்டாருக்கு இருந்திருந்தால், திருமண நிச்சயம் செய்வதற்கு முன்பே இரு குடும்ப பின்னணியையும், கோத்திரங்களையும் தீர விசாரித்துச் சரிபார்த்திருக்க வேண்டும். அதை விடுத்து, திருமணப் பந்தல் வரை வந்து, சடங்குகள் தொடங்கும் கடைசி நிமிடத்தில் இத்தகைய காரணத்தைக் கூறி திருமணத்தை நிறுத்தியது மணமகன் வீட்டாரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
