உடல் சோர்வு எல்லோருக்கும் வருவது சகஜம் தான். ஆனால் அது குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் இருக்க வேண்டும். நாள் முழுவதும் இருந்தால் அது நம் உடலில் கோளாறு என்பதை குறிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு உடல்நலம் நன்றாக இருந்தாலும் கூட சுறுசுறுப்பாக இருக்காதாது போன்று உணர்வார்கள். எளிதாக சோர்ந்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.
முதலில் தினமும் காலையில் ஒரே நேரத்தில் எழும்ப வேண்டும். எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரை பருக வேண்டும். அதற்கு பிறகு தான் டீ காபி எதுவானாலும் சாப்பிடலாம். காலைக்கடன்களை தவறாமல் முடித்து விட வேண்டும். அதற்கு பிறகு காலையில் தினமும் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அடுத்ததாக நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க காலை உணவு மிகவும் முக்கியமானது. காலை உணவு உடலில் ஆற்றலை அதிகரிக்க அந்த நாள் முழுவதும் செயல்பட உதவுகிறது. அதனால் அது ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். முளைகட்டிய பயிறு, வேக வைத்த சுண்டல், சாலடுகள், முட்டை, போன்றவற்றை சாப்பிடலாம். பூரி பொங்கல் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம். காலை உணவில் புரதம் கொழுப்பு கார்போஹைட் போல சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டும்.
பின்னர் அடுத்ததாக ஒரு 11 மணி அளவில் ஏதேனும் ஒரு பழமோ பச்சை காய்கறியோ ஜூஸோ பருகலாம். அதற்குப் பிறகு 12 மணியிலிருந்து ஒரு மணிக்குள் மதிய உணவை எடுத்து விட வேண்டும். உடல் சுறுசுறுப்பாக இருக்க மூன்று வேளை உணவையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுறுசுறுப்பாக வைக்க உதவும். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவுடன் உடற்பயிற்சி செய்தால் மிகவும் சிறப்பு. அப்படி முடியவில்லை என்றால் ஒரு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆறு மணியிலிருந்து 7:00 மணிக்குள் இரவு உணவை முடித்து விட வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்து விட வேண்டும். பிறகு 9 அல்லது 10 மணிக்குள் தூங்குவதற்கு சென்று விட வேண்டும். சரியான தூக்கம் இருந்தாலே உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
ஃபாஸ்ட் ஃபுட், எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து சிறுதானிய உணவுகள் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இது தவிர சரியான தூக்கம் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி போன்றவற்றை தவறாமல் தொடர்ந்து பின்பற்றும்போது நாள் முழுக்க உங்களால் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பது சாத்தியமான ஒன்றுதான்.