தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முதலாகத் தயாரித்த படம் என்றால் அது ராஜபார்வைதான். கமல்ஹாசனின் 100 ஆவது படம் ராஜபார்வை. அதனால் அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த படத்தில் பார்வையற்ற இசைக் கலைஞராக கமல் நடித்திருந்தார். நல்ல பாடல்கள், திரைக்கதை மற்றும் நடிப்பு இருந்தும் அந்த படம் படுதோல்வி அடைந்தது.

ஆனாலும் காலம் கடந்து அந்த படம் நினைவில் வைத்து கொண்டாடப்படுகிறது. சமீபத்தில் அந்த படத்தின் மறுதிரையிடல் மற்றும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவுக்கான பாராட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி கமல்ஹாசனிடம் “இந்த படத்தை எடுத்து நஷ்டமடைந்ததற்காக சிவாஜி கணேசன் உங்களை திட்டியதாக கேள்விப்பட்டோம்” எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த கமல் “எல்லோரும் கேட்டார்கள். அப்பா அம்மா சொந்தக் காரர்கள் கூட கேட்டார்கள். ஆனால் சிவாஜி ஐயா அப்படி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர் அந்த நாள் படம் நடித்தவர். ரங்கூன் ராதா நடித்தவர். அவர் அப்படியெல்லாம் கேட்கமாட்டார். சொல்லப்போனால் நாயகன் படம் வந்தபோது அதிகமாகப் பாராட்டியதே அவர்தான். நாயகன் படம் பார்த்துவிட்டு என்னை மட்டும் தனியாக அழைத்து அவர் ஒரு வார்த்தை சொன்னார். அதை நான் எப்பொதும் வெளியே சொல்லமாட்டேன். அதை என்னுடைய பெருமையாக நானே வைத்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.
