தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வந்தார் சூர்யா. 2000 களில் உத்வேகம் பெற்ற அவரின் வளர்ச்சி 2010 களில் உச்சம் தொட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவரால் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுக்க முடியவில்லை.
இடையில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய வெற்றி படங்கள் அமைந்தாலும் அவை ஓடிடியில் ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.
சினிமாவில் நுழைந்தபோது எதுவும் தெரியாமல் வந்தாலும் படிப்படியாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு முன்னணி நடிகரானார். 2000 களில் கஜினி, காக்க காக்க, சிங்கம், அயன் மற்றும் வாரணம் ஆயிரம் என பல ஹிட் படங்களைக் கொடுத்து விஜய், அஜித்துக்கு நிகராக உருவானார். ஆனால் கடைசியாக ஒரு ஹிட் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் காரணம் என்ன என்பது பற்றி முகநூலில் மகாதேவன் என்பவர் எழுதியுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

அந்த பதிவின் ஒரு பகுதியில் “சிங்கம் 2 படத்தின் வெற்றி தான் சூர்யாவை தடம் மாற வைத்தது. சிங்கம் 2 படம் தெலுங்கில் பெரு வெற்றி பெற்றதும், தெலுங்கு ஆடியன்ஸுக்கு என்று சீன்கள் வைப்பது, கவர்ச்சி காட்சிகள் வைப்பது என இறங்கினார். அஞ்சான் படம் வரையிலும், சூர்யாவின் படங்கள் பேமிலி ஆடியன்ஸிற்கானது. ஆனால் அஞ்சான் படத்தில் கவர்ச்சி நாயகி, கிளப் டான்ஸ் வைத்தது எல்லாமே தெலுங்கு ஆடியன்ஸை கவர் செய்ய. ஓவர் பில்டப் காட்சிகள் உடம்புக்கு ஆகாது என்று எடுத்துச்சொல்ல யாருமில்லை.
மாஸ் படத்தைப் பொறுத்தவரை அந்தக் கதையே ஒரு கொரிய படத்தின் அட்டக்காப்பி. அதை வெங்கட்பிரபு தன் பாணியில் காமெடி, செண்டிமெண்ட் ட்ரீட்மெண்டில் திரைக்கதை அமைத்திருந்தார். அப்படியே எடுத்திருந்தால் நன்றாகவே ஓடியிருக்கும். மாஸ் படத்தில் “எங்கேயும் எப்போதும்” ஜெய் வந்து போகும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது நினைவிருக்கலாம்.
ஆனால் வழக்கம் போல் சூர்யா டீம் தலையிட்டு, கதையை மாற்றி, டபுள் ரோல் கொண்டு வந்து, அதில் இலங்கைத் தமிழ் பேச வைத்து மொத்தமாக கடித்துக் குதற, படம் பப்படமாகியது. அதன்பிறகு சூர்யா நடித்த படங்கள் எல்லாமே தமிழ், தெலுங்கு ஆடியன்ஸை கவர் செய்து வியாபாரத்தை பெருக்க எடுக்கப்பட்டதே. ” எனக் கூறியுள்ளார்.
