அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வீண் வேலை என்பது போல அவர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் சென்ற கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுமே இந்தத் திடீர் மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. இந்த அரசியல் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4% வரை உயர்ந்து, ஒரு பீப்பாய் 76 டாலரைக் கடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வளைகுடா நாட்டு மோதல் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் தலைவலியாக மாறக்கூடும். ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் மேலான பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படும். சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் இறக்குமதி செலவு பெருமளவு அதிகரிக்கும். இதன் காரணமாக, அரசு வரிகளைக் குறைக்காத பட்சத்தில் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகளவில் அமெரிக்க டாலர்களைச் செலவிட வேண்டியிருப்பதால், டாலருக்கான தேவை அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்தால், கச்சா எண்ணெய் மட்டுமின்றி இந்தியா இறக்குமதி செய்யும் மற்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தானாகவே உயரும். மேலும், எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரித்து, காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களின் விலையும் ஏறும். இந்தச் சங்கிலித் தொடர் விளைவுகளால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து, விமானம், பெயிண்ட் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களின் லாபம் குறைந்து இந்தியப் பங்குச்சந்தையும் சரிவைச் சந்திக்கலாம்.
இருப்பினும், ஒரே நாளில் ஏற்பட்ட இந்த விலை உயர் வால் இந்தியாவில் உடனடியாகப் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டுவிடாது எனப் பொருளாதார நிபுணர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இந்த மோதலை ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தால் உலகச் சந்தை விரைவில் சீராகிவிடும். ஆனால், நிலைமை கைமீறிப் போய் முழு வீச்சிலான போர் வெடித்து, ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் முடக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயரும். அது இந்திய மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் தொடங்கி ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்திலும் விலை உயர்வை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
