“தம்பிக்கு போடுங்க பாட்டி”…. 72 வயது மூதாட்டியிடம் தேர்தல் ஊழியர் செய்த லீலை….. கொதித்த எழுந்த கட்சிகள்…. தாராபுரத்தில் பயங்கர பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் உள்ள 320 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2.23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வரும் நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா காலையிலேயே தனது வாக்கைப் பதிவாக்கம் செய்தார். இருப்பினும், காலை 11 மணி நிலவரப்படி இத்தொகுதியில் 37.28 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது கடந்த சட்டமன்றத் தேர்தலின் இதே நேரத்து பதிவான 42.45 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 5.17 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சற்று பாதிக்கப்பட்டது; உதாரணமாக, கோட்டப்புலிப்பாளையம் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகச் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுப் பின்னர் மீண்டும் தொடங்கியது.

   

இதற்கிடையே, கொழிஞ்சிவாடி 137-ஆவது வாக்குச் சாவடியான அரசு நடுநிலைப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிக்க வந்த 72 வயது மூதாட்டி ஒருவருக்கு வாக்களிக்கும் முறை தெரியாததால், அங்குப் பணியிலிருந்த தேர்தல் ஊழியரிடம் திமுகவுக்கு வாக்களிப்பது எப்படி எனக் கேட்டுள்ளார். ஆனால், அந்த ஊழியர் மூதாட்டியைத் தவெகவுக்கு வாக்களிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த திமுக மற்றும் அதிமுக பூத் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு வாக்குப்பதிவு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டது.

   

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தேர்தல் ஊழியர் மற்றும் மூதாட்டியிடம் விசாரணை நடத்தி, விவிபாட் (VVPAT) இயந்திரத்தைச் சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதியளித்தார். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, கொழிஞ்சிவாடி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு மீண்டும் சுமுகமாகத் தொடங்கியது. தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதங்கள் காரணமாகத் தாராபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.