திண்டுக்கல்லில் பரபரப்பு…. காவல் நிலையம் சென்ற ரவுடி பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை…. நடுரோட்டில் நடந்த கோரச் சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் ‘பாத்ரூம்’ முருகன் படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வீரபத்திரன், நீதிமன்ற நிபந்தனையின்படி காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றபோது, பட்டப்பகலில் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான பாத்ரூம் முருகன், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு வழக்கு விவகாரம் தொடர்பான முன்விரோதம் காரணமாக ஓடும் காரிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார் ஓட்டுநர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்த நிலையில், பிரதான குற்றவாளியான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன் உட்பட அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

   

இந்நிலையில், சாணார்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடுவதற்காக வீரபத்திரன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் – நத்தம் நெடுஞ்சாலையில் நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பாதையிலேயே வீரபத்திரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவருடன் வந்த மனைவி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

   

தகவலறிந்து வந்த சாணார்பட்டி போலீசார் படுகாயமடைந்த மனைவியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கொலையாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது பழிக்குப் பழியாக நடத்தப்பட்ட படுகொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.