கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் (ஷோ ரூம்) புகுந்து, அங்கிருந்த பெண்ணிடம் தகராறு செய்து வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேடப்பட்டி பேரூராட்சி நகரச் செயலாளர் பிரகாஷ் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கணவர் இல்லாத நேரத்தில் பிரகாஷ் அத்துமீறி நடந்து கொண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ பதிவுகளும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்தச் சம்பவம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், கட்சித் தலைமை உடனடி ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது குறித்துக் கோவை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கழகத்தின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்ட பிரகாஷ், அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 15.11.2026 முதல் நிரந்தரமாக நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
