செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தீவிர வளர்ச்சியால் உலகளாவிய முன்னணி நிதிச்சேவை நிறுவனமான விசா, சுமார் 2,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், மனித மேற்பார்வையுடன் தாமாகவே இயங்கும் ‘ஏஜென்டிக் ஏஐ’ தொழில்நுட்பத்தை நோக்கி நகரவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகச் சரிவு காரணமாக அல்லாமல், எதிர்காலத் தொழில்முறை மாற்றத்தைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரியான் மெக்கினர்னி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப மையங்களான பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இயங்கும் விசா மையங்களிலும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 29 அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி மின்னஞ்சல்கள் மூலம் பணிநீக்கத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் சீனியர் டைரக்டர்கள், என்ஜினீயரிங் மேனேஜர்கள் போன்ற மூத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 28 பேர் கொண்ட ஒரு குழுவில் ஒரே நாளில் 10 ஊழியர்கள் நீக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
ஏற்கனவே மாஸ்டர்கார்டு, அமேசான் மற்றும் பிளாக் போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது விசாவின் இந்த முடிவும் சேர்ந்து இந்தியத் தொழில்நுட்பத் துறையில் பெரும் கவலையையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் விரைவான வருகை பாரம்பரிய தொழில்நுட்பப் பணிகளை மாற்றி அமைத்து வருவதையும், இதனால் இந்திய ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்களையும் இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
