விலங்குகளுக்கு எதிராகக் காட்டப்படும் வன்முறை மற்றும் அதற்காக குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தண்டனை முறைகள் குறித்த விவாதத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ கிளப்பியுள்ளது. தனது மகன் வளர்ப்புப் பூனையை ஆத்திரத்தில் தூக்கி எறிந்ததைக் கண்ட தாய், அதற்குத் தண்டனையாக ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டுள்ளார். சிறுவன் பூனையை எப்படி நடத்தினானோ, அதேபோல் அவனது விலையுயர்ந்த ‘பிளே ஸ்டேஷன் 5’ (PS5) கேமிங் கன்சோலைத் தூக்கி எறியுமாறு அந்தத் தாய் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, இணையவாசிகளை இரு பிரிவினராகப் பிரித்துள்ளது. ஒரு தரப்பினர், “தற்காப்பற்ற ஒரு உயிரினத்தைத் துன்புறுத்தும் சிறுவனுக்கு இத்தகைய கடுமையான தண்டனை அவசியம்; இது அவனுக்குப் பொறுப்பையும், மற்ற உயிர்கள் மீதான அக்கறையையும் கற்றுக்கொடுக்கும்” என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், விலங்குகளைத் துன்புறுத்துவது ஒரு ஆபத்தான மனநிலை என்றும் அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
She stood there, shaking, replaying what she had just seen; her son slamming the family’s pet cat in anger. The shock hadn’t worn off, and neither had the fear. So she made a decision in the heat of the moment: she handed him his PS5 and told him to slam it the same way… to feel… pic.twitter.com/8uQOy5xrFb
— Dr.L (@DrAlmarielao) April 28, 2026
மறுபுறம், இந்தத் தண்டனை முறையைச் சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். “கோபத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கு, வன்முறை மூலம் பாடம் கற்பிப்பது சரியான தீர்வு அல்ல; இது மேலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஒரு பொருளை உடைக்கச் சொல்வதற்குப் பதிலாக, அவனிடமிருந்து அந்த விளையாட்டைப் பறித்துக்கொள்வது அல்லது அவனுக்கு மனநல ஆலோசனை வழங்குவதே சிறந்த முறையாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
