தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள இவர் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு பின்னர் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து அவர் நடித்த திரைப்படம்தான் பிரியமுடன். அந்த படத்தை திரைப்பட கல்லூரி மாணவரான வின்செண்ட் செல்வா இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் க்ளைமேக்ஸில் விஜய் கதாபாத்திரம் இறப்போது போல இயக்குனர் உருவாக்கி இருந்தாராம். ஆனால் விஜய்யின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அப்படி படமாக்கவேண்டாம் என சொல்லி க்ளைமேக்ஸை மாற்றிவிட்டாராம், விஜய்யின் தந்தை SAC. அதனால் வேறு க்ளைமேக்ஸை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
ஆனால் அதைக் கேள்விப்பட்ட விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்தான், இந்த கதைக்கு விஜய் கதாபாத்திரம் இறப்பது போன்ற க்ளைமேக்ஸ்தான் சரியாக வரும். அதனால் நம் மகன் என்று பார்க்காமல் நீங்கள் அந்த க்ளைமேக்ஸையே எடுக்க சொல்லுங்கள் என சொல்லிவிட்டாராம். அதன் பின்னர்தான் தற்போது இருக்கும் கிளைமேக்ஸை படமாக்கியுள்ளார்கள்.
இந்த தகவலை வின்செண்ட் செல்வா சமீபத்தில் கலந்துகொண்ட சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த படத்தின் வெற்றியால் பின்னர் வின்செண்ட் செல்வா விஜய்யை வைத்து யூத் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.