தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிகர் ரகுவரன் என்றால் அது மிகையல்ல. ரஜினி படங்களில் பிரதான வில்லனாக நடித்தவர் ரகுவரன். பாட்சா, அருணாசலம், ராஜா சின்ன ரோஜா, மனிதன் என பல படங்களில் வில்லனாக அசத்தியிருப்பார். குறிப்பாக முதல்வன் படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக அரங்கநாதன் கேரக்டரில் ரகுவரனின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். தனது முகபாவத்திலும், வசன உச்சரிப்பிலும் ரசிகர்களின் மனங்களை வென்ற நடிகர் ரகுவரன். துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த ரகுவரனுக்கு நல்ல அறிமுகத்தை வரவேற்பை கொடுத்த படம் சம்சாரம் அது மின்சாரம். அதில் பெற்ற தந்தையையே வாங்கிய கடனை திருப்பிக்கொடுங்கள் என கேட்கும் மூத்த மகன் சிதம்பரம் கேரக்டரில் நடித்து அழுத்தமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கேஎஸ் ரவிக்குமாரின் முதல் படமான புரியாத புதிர் படத்தில் ரேகாவின் சைக்கோ கணவரான அவர் பேசிய ஐ நோ டயலாக் இன்றும் ரசிக்கப்படுகிறது.

ரகுவரன் வில்லன் பாத்திரங்களில் நடித்துவந்த நிலையில், ஒரு கட்டத்துக்கு பிறகு கேரக்டர் ரோல்களிலும் தன் கவனத்தை செலுத்தினார். அஜீத் அண்ணனாக முகவரி, விஜய் நடித்த திருமலை, லவ்டுடே படங்கள் மற்றும் தனுஷ் உடன் யாரடி நீ மோகினி போன்ற படங்களில் அப்பா, அண்ணன் கேரக்டர்களில் நடித்தார். தமிழ் சினிமா நடிகர்களில் முதன்முதலாக கேரவன் வாகனம் பயன்படுத்தியது நடிகர் ரகுவரன்தான். பெரும்பாலும் அவர் படப்பிடிப்பு தளங்களுக்கு தனது கேரவன் வேனில்தான் பயணித்து செல்வார். ஷூட்டிங் இடைவேளைகளில் கேரவனில் வந்து ஓய்வெடுத்துக் கொள்வார். அதனால் 30 ஆண்டுகளுக்கு முன் ரகுவரனை பார்க்க வரும் ரசிகர்கள், அந்த கேரவனை வேனை பார்த்து ஆச்சரியப்பட்டு போவார்கள். அதன்முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

நடிகை ரோகிணியை ரகுவரன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஒரு பிள்ளைக்கும் தந்தையானார். ஆனால் ஒரு கட்டத்தில் ரகுவரன் அதிகமான மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார் என்று ரோகிணி அவரை பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அதனால், தனிமையில் இருந்த ரகுவரன், 49 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மனைவி, பிள்ளை, குடும்பம் என வாழ்ந்த ரகுவரன், தனது கடைசி காலத்தில் ஆதரவுக்கு யாருமே இல்லாத நிலையில், தனிமையில், விரக்தியில் வாழ்ந்த சோகமே அவரை மறைவுக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. மதுப்பழக்கம், போதை பழக்கம் கொண்டவர் என விமர்சிக்கப்பட்டாலும் ரகுவரன், தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகராலும் நெருங்க முடியாத ஒரு தனித்துவமான நடிகராக விளங்கியவர். அவரது இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று சொல்லும் அளவுக்கு தனது நடிப்பாற்றலை திறம்பட வெளிப்படுத்திய உன்னத கலைஞனாக இருந்தவர் என்றால் அது மிகையல்ல.
