“உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று தைரியமாக மறுத்து, என் பெயரைச் சொல்லுங்கள்” என்று தமிழக முதல்வர் விஜய் பொதுமேடையில் பேசி ஒரு வாரம் கூட நிறைவடையாத சூழலில், தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியே லஞ்சப் புகாரில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீராசாமி, அரசு ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்போது கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மாம்பாக்கம் பகுதியில் நவீன் என்ற அரசு ஒப்பந்ததாரர் ஒன்பது லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்திருந்தார். பணிகள் முடிந்தும் அதற்கான தொகை விடுவிக்கப்படாததால், அந்தப் பணத்தைப் பெற்றுத்தர வீராசாமி ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த லஞ்சப் பணம் கைமாறும் வீடியோ ஆதாரத்துடன் வெளியானதைத் தொடர்ந்து, அது ‘கைமாற்றாகப் பெறப்பட்ட பணம்’ என்று வீராசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அவர் மீது தவெக தலைமை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அதை ஒழிக்கவே தான் அரசியலுக்கு வந்ததாகக் கூறி ஆட்சியைப் பிடித்தவர் விஜய். தனது ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது என்று அவர் மக்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், தவெக ஆட்சியின் தொடக்கத்திலேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியில் தெரிந்திருப்பது வீராசாமியின் ஊழல் மட்டும்தான் என்றும், பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளிலும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்கும் நடைமுறை இன்னும் தொடர்வதாகவும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் புலம்பல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழலை உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள், முதல்வர் விஜய் இனிவரும் காலங்களில் மிகவும் உஷாராகச் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக முதல்வர் கொள்கை அளவில் உறுதியாக இருந்தாலும், அவரது அமைச்சரவையிலும், அரசு நிர்வாகத்தின் கீழ்மட்டத்திலும் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம். பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிருப்தி வெடிப்பதற்கு முன்பாகவே, ஊழல் அதிகாரிகளையும் நிர்வாகிகளையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக அரசு உள்ளது.
