தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வில், அக்கட்சியைச் சேர்ந்த 800 நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டுள்ள க்யூஆர் (QR) கோடு அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணிகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோருக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தவெகவின் கொள்கைகளும் திட்டங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தேர்தல் அறிக்கை வெளியீடு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
