ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றாலும், கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்ததால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதற்கிடையே நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ள நிலையில், தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போது சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய மாஜி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்திருந்தாலும், கிளைக்கழகம் முதல் மாநில அளவிலான பணிகளைச் செய்வதற்குப் போதிய நிர்வாகிகள் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் கட்சியைப் பலப்படுத்த, அதிமுகவை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் இழுக்க தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான முழு அதிகாரமும் தவெக மூத்த தலைவர் ஆதவ் அர்ஜுனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளைத் தவெகவிற்கு அழைத்து வருபவர்களுக்குக் கட்சியில் முக்கிய பதவிகள் மட்டுமின்றி, வாரியத் தலைவர் பதவிகளும் ‘ஜாக்பாட்’ பரிசாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி சலுகைகள் காரணமாகக் கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிமுகவின் 30 சதவீத நிர்வாகிகள் தவெகவிற்கு மாறியுள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலர் இணைய உள்ளதால், மாவட்ட வாரியாகப் பிரம்மாண்ட இணைப்பு விழாக்களை நடத்தத் தவெக தலைமை திட்டமிட்டு, அதற்கான பொறுப்பை ஏற்கனவே கட்சியில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளது. தவெகவின் இந்தத் தீவிரமான ஆள்சேர்ப்புத் திட்டத்தை அதிமுக தலைமை தடுத்து நிறுத்துமா அல்லது வழக்கம் போலக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா என்ற கேள்வி தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
