தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி என அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
குறிப்பாக, காவல்துறையினர் முறையான பாதுகாப்பு வழங்க மறுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், மறுபுறம் தமிழக பாஜகவின் ஐடி பிரிவுத் தலைவர் நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், விஜய் தற்போது ‘Y’ பிரிவு பாதுகாப்பில் இருந்தபோதிலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டு, உடனடியாக அவரது பாதுகாப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில் விவாதங்களை கிளப்பியுள்ளன.
