தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தற்போது தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பிரச்சாரத்தின் போது அவரைச் சுற்றி இருக்கும் பவுன்சர்கள் கையில் வைத்திருக்கும் கருப்பு நிற சூட்கேஸ்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. பார்ப்பதற்கு சாதாரண லேப்டாப் பேக் போலத் தோற்றமளிக்கும் இது, உண்மையில் விஜய்யின் தனிப்பட்ட உடைமைகளை வைத்திருக்கும் பை அல்ல; இது ஒரு நவீனப் பாதுகாப்பு கருவியான ‘பாலிஸ்டிக் ஷீல்ட் பேக்’ (Ballistic Shield Bag) எனப்படும் மடிக்கக்கூடிய புல்லட் புரூப் கேடயமாகும்.
இந்தக் கருப்பு நிற சூட்கேஸின் நுணுக்கம் அதன் வேகமான செயல்பாட்டில் உள்ளது. ஆபத்தான நேரங்களில் இதில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் அல்லது ஒரு முனையைப் பிடித்து உதறினால், அது உடனடியாகக் கீழ்நோக்கி விரிந்து ஒரு மனிதனின் முழு உடலையும் மறைக்கும் அளவிற்கான கேடயமாக மாறிவிடும். கூட்ட நெரிசலில் அல்லது எதிர்பாராத தாக்குதல்கள் நடக்கும்போது, முக்கிய நபரைச் சுற்றி அரணாக நின்று பாதுகாப்பதற்காகவே உலகத் தலைவர்கள் மற்றும் மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் இதைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த பேக் பார்ப்பதற்குத் துணி போல மென்மையாகத் தெரிந்தாலும், இதனுள் ‘கெல்வர்’ (Kevlar) எனப்படும் இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையான சின்தடிக் பைபர் இழைகள் உள்ளன. அத்துடன் நவீன புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் UHMWPE எனும் பிளாஸ்டிக் இழைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை கைத்துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டு சிதறல்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கும் திறன் கொண்டவை. விஜய்யின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் இந்த உயர் ரகத் தொழில்நுட்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
