ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று நடைபெற்ற இந்த விழாவின்போது, நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தொடங்கிய வாக்குவாதம், ஒருகட்டத்தில் கைகலப்பாகவும் மோதலாகவும் மாறியது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்திலேயே ஆளுங்கட்சிக்கு நிகராக தவெகவினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு வந்திருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீவிரமாகத் தாக்கிக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்திச் சமாதானப்படுத்தினர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் தொடராமல் இருக்க மோதலில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் அனைவரையும் நகராட்சி அலுவலக வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேற்றினர். தலைவர் பிறந்தநாள் விழாவில் கட்சியினரே இரு பிரிவாகப் பிரிந்து மோதிக்கொண்ட இந்தச் சம்பவம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
