“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

By Nanthini on ஐப்பசி 1, 2026

Spread the love

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “விஜயகாந்தின் ஆன்மா குறித்துப் பேசுவதற்கு எங்கள் கட்சிக்கும் குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது” என்று ஆதவ் அர்ஜுனாவுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார். மேலும், பெண்களைப் பற்றி யார் தரக்குறைவாகப் பேசினாலும் அதைத் தேமுதிக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆதவ் அர்ஜுனா எப்போதாவது கேப்டனை நேரில் பார்த்திருக்கிறாரா? விஜயகாந்தின் ஆன்மா எப்போதும் என்னைச் சுற்றிதான் இருக்கும்; எனவே தம்பி ஆதவ் அர்ஜுனா இத்தோடு கேப்டனைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எச்சரித்தார். மேலும், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரேமலதா, மதுராந்தகத்தில் பாமகவின் நிலைப்பாடு குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

   

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்திய அவர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நாளை நடைபெறவுள்ள கிராமசபை கூட்டங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தடை செய்யக் கோரி தேமுதிக நிர்வாகிகள் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

   

மாநிலத்தின் தற்போதைய சூழல் குறித்துப் பேசுகையில், பேருந்து கட்டணம், விலைவாசி உயர்வு, மின்கட்டணம், டாஸ்மாக் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனப் பல பிரச்சனைகள் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அவலங்களாக மாறியுள்ளன என்றார். கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் இன்னும் நிறைவேற்றவில்லை என்றும், பெண்களுக்கு வாக்குறுதியளித்த ரூ.2,500 தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.