தவெக – பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருவதாகவும் அக்கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னதாக, தவெக கூட்டணியில் பாமக இணையவுள்ளதாகவும், அக்கட்சியைச் சேர்ந்த சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இருப்பினும், இத்தகவலை மறுத்துள்ள பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, இதில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஃபேஸ்புக் நேரலையில் பேசிய திருமாவளவன், “பாமக மற்றும் பாஜக இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என்ற 15 ஆண்டுகால உறுதியான நிலைப்பாட்டைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார். தவெக கூட்டணியில் பாமக இணைவதாக வதந்தி பரப்பினால், விசிக தொண்டர்கள் தேர்தல் களத்தில் பின்வாங்குவார்கள், தவெக வேட்பாளர்களுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்ற உள்நோக்கத்துடனேயே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், விசிகவை தவெக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளிலுமே சேரவிடாமல் தனிமைப்படுத்த வேண்டும் என்ற சூழ்ச்சியே இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிவித்தார். ஆட்சி அமைப்பதற்கு முன்பே பாமக – தவெக இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகப் பரப்பப்பட்ட தகவல்களை மறுத்த அவர், தவெக உண்மையில் விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையே திரட்டியது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “தவெக – பாமக இடையே என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்பது குறித்து நாம் எந்த ஆய்வும் செய்யத் தேவையில்லை; அதில் நமக்கு எவ்வித குழப்பமும் இல்லை” எனக் கூறிய திருமாவளவன், இதுபோன்ற வதந்திகளைத் தோழர்கள் பொருட்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். தவெகவுடன் விசிக கொண்டுள்ள அரசியல் உறவு திடீரென உருவானது என்றாலும், அது வரலாற்று மற்றும் காலத்தின் கட்டாயத்தால் உருவான ஒன்று என்பதை அவர் இறுதியாக வலியுறுத்தினார்.
