தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயகாந்த் வைத்து படம் எடுக்க வேண்டும் என முடிவெடுத்து ராவுத்தரை போய் பார்த்து பேசினேன். அதிக சம்பளம் சொன்னால் நான் ஓடி விடுவேன் என நினைத்து விஜயகாந்த் வாங்குவதை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் கேட்டார். நானும் உடனே சம்மதம் சொன்னதும் அவர் ஆடிப் போயிட்டாரு.

எப்போது அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டதும் அவருக்கு பேச்சே வரல. கொஞ்ச நேரம் பொறுங்க விஜயகாந்த் வந்துவிடும் பேசிட்டு சொல்றேன் என்று சொல்லிட்டாரு. அதன் பிறகு விஜயகாந்த் ஓகே சொன்னதும் கூலிக்காரன் படத்துக்காக நிறைய போட்டோஸ் எடுத்தேன். ஆயிரத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த் கூலிக்காரன் திரைப்படம் மூலமாகத்தான் கோடியில் சம்பளம் பெற்றார் என்று தாணு பேசியுள்ளார்.
