தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம சுரங்கத் திட்ட விவகாரத்தில் எடுத்துள்ள புதிய முடிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில், “இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை” என்ற தலைப்பில், தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இதுபோன்ற நாசகர, நச்சுத் திட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மிகக் கடுமையாக எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு, மக்கள் எதிர்த்த அதே திட்டத்திற்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களிலும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்திய அருமணல் ஆலைக்குத் தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகேயுள்ள கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 1817 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முன்பு முடிவு செய்தது. இதில் 1144 எக்டேர் நிலத்தில் சுரங்கம் அமைக்க கடந்த 2020-ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 11.06.2021 அன்று மத்திய அரசு நில ஒதுக்கீட்டு ஆணையைப் பிறப்பித்தது. தென் மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் முடங்கியிருந்ததோடு, இந்த ஐந்து ஆண்டு கால ஆணை முடிவடைந்து திட்டம் காலாவதியாகிவிட்டதாகப் பொதுமக்கள் நினைத்திருந்த சூழலில், தமிழக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த 10.06.2026 அன்று நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மக்களின் குரலாக ஒலித்து, இயற்கை வளங்களைக் காப்போம் என்று முழங்கிய தவெக, தற்போது அதிகாரத்திற்கு வந்தவுடன் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசின் முயற்சிக்குத் துணை போயிருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன. நமது மண்ணையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாழ்படுத்தும் இந்த ஆபத்தான அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கான கால நீட்டிப்பு அரசாணையை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தென் மாவட்டங்களில் மிக வலுவாக எழுந்து வருகிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…
தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…
திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் மீது,…
தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம்…
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள்…