அரசியல் காரணத்தினால் பிரச்சனைகளை சந்தித்த விஜய் படங்கள்.. வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் என்று சொன்ன ‘தலைவா’..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசூல் மன்னனாக நம்பர் 1 இடத்தில் இருந்த ரஜினியின் இடத்தை சமீப சில ஆண்டுகளாக அசைத்துப் பார்த்தவர் விஜய். விஜய்யின் சமீபத்தைய சில படங்கள் ரஜினியின் வசூலைத் தாண்டிவிட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்லப்பட்டன.

இது சம்மந்தமாக ரஜினியும் விஜய்யும் மேடையில் மாறி மாறி மறைமுகமாக தாக்கி பேசிக்கொண்ட சம்பவங்களும் நடந்தன. எப்படியோ ரஜினியின் வசூலை நெருங்கிவிட்டார் விஜய் என்பது மிகையில்லாத உண்மை. இந்நிலையில் தனது சினிமா கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியல் கட்சி ஆரம்பித்து சினிமாவை விட்டு விலக உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

   

விஜய்யின் அரசியல் ஆர்வம் என்பது சமீபத்தில் உருவானது இல்லை. 2008 ஆம் ஆண்டு முதலே விஜய்க்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தி அதற்காக பல நற்பணிகளை மேற்கொள்ள வைத்தார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன். விஜய்யின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றி கொடியெல்லாம் அறிமுகம் செய்தார்.

விஜய்யும் அண்ணா ஹசாரே போராட்டம், நாகை மீனவர் போராட்டம் என அவ்வப்போது அரசியல் பேசிவந்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார் என்பது அப்போதே உறுதியானது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் ஆர்வம் காரணமாக அவரின் இரண்டு படங்கள் ரிலீஸின் போது சிக்கல்களுக்கு உள்ளாகின.

2011 ஆம் ஆண்டு விஜய் நடித்த காவலன் திரைப்பட ரிலீஸின் போது அப்போதைய திமுக அரசு அந்த படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் பல இடையூறுகளை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அந்த ஆண்டு நடந்த தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விஜய்யும் அவர் தந்தையும் முதல்வர் ஜெயலலிதாவை சென்று சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

ஆனால் அதிமுக ஆட்சியிலும் விஜய் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. 2014 ஆம் ஆண்டு விஜய்யின் தலைவா பட ரிலீஸின் போது ஜெயலலிதா விஜய் மேல் கோபத்தில் இருந்ததாகவும், அதனால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்ற விஜய்யை அவர் சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார். அதன் பின்னர் ஒருவழியாக அந்த படம் ரிலீஸ் ஆனது.