“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையைச் சென்னையில் இன்று வெளியிட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த விஜய், “ஸ்டாலின் சார் போல மக்களை ஏமாற்ற மாட்டோம்; அதேபோல் அள்ளிவிடும் தேர்தல் அறிக்கையும் இதுவல்ல” என்று அதிரடியாகப் பேசினார். இரண்டு கட்சிகளும் ஒரே குடையின் கீழ் செயல்படும் கூட்டங்கள் என்றும், மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் காட்டும் அலட்சியம் அவர்களின் தேர்தல் அறிக்கைகளிலேயே பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவெகவின் தேர்தல் அறிக்கை அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய முப்பால்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆட்சியில் எது சாத்தியமோ அதை மட்டுமே அறிக்கையாகக் கொடுத்துள்ளதாகவும், சொன்னதைச் செய்வது மட்டுமின்றி சொல்லாத நல்ல திட்டங்களையும் ஆட்சிக்கு வந்த பின் முன்னெடுப்போம் என்றும் விஜய் உறுதி அளித்தார். குறிப்பாக, மற்ற கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை விட, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

   

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், மற்றும் மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் உடன் பட்டுப்புடவை வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதேபோல் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் அனைவருக்கும் இலவச வருடாந்திர மருத்துவப் பரிசோதனை போன்ற திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

   

விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயக் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள், மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரும் திட்டம் மற்றும் வீடற்றவர்களுக்குப் பட்டா வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த அதிரடி தேர்தல் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.