தமிழக அரசியல் களத்தில் நிலவும் பெரும் பரபரப்புகளுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 9 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு இன்னும் 5 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறி வரும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் தலா 2 என மொத்தம் 6 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த இடதுசாரி மற்றும் விசிக கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரியுள்ள நிலையில், அவர்கள் தங்களது இறுதி முடிவை இன்று மதியத்திற்குள் அறிவிக்க உள்ளனர். ஒருவேளை இவர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால், அதிமுக அல்லது பாமகவின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்படும்; ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நீடித்தால், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாடவும் விஜய் தரப்பு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்று கூறி வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜனநாயக ரீதியாக தங்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, ஆளுநரின் முடிவுக்கு எதிராகப் போராடவும் தவெக நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் இணைந்து ஆட்சி அமைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தச் சூழல் உருவானால், தவெகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலும் பரவி வருகிறது. இத்தகைய குழப்பமான அரசியல் சூழலில், இன்றைய பனையூர் கூட்டம் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டின் அடுத்த ஆட்சியையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
