தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய சிக்கலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சட்டரீதியாக கையாண்டு வரும் விஜய் சமீபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் நிவாரணத் தொகை வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று மாமல்லபுரத்திற்கு நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்த விஜய் அடுத்த கட்ட பணிகளை தொடங்கியுள்ளார். அவரது அரசியல் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும் என்று CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை அறிவித்தவுடன் உரிய அனுமதி பெற்று விஜயின் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தில் அடுத்தடுத்து அதிரடியான முடிவுகளை விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.
