தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்பட்ட 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். பின்னர், அங்கிருந்து பெரம்பூர் செல்லும் ’29ஏ’ வழித்தடப் பேருந்தில் ஏறி, கலங்கரை விளக்கம் வரை அவர் பயணம் செய்தார். அப்போது, பேருந்து நடத்துநரிடம் தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொண்டார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனைவருக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பதற்கான ‘எம்எல்ஏ பாஸ்’ வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது, முதல்வர் விஜய் எதற்காகப் பாஸைக் காட்டாமல் தனியாகப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது சாதாரண எளிய மனிதராக, விதிகளுக்கு உட்பட்டுப் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் டிக்கெட் எடுத்ததாக ஒரு தரப்பினர் பாராட்டுகின்றனர். அதே சமயம், பேருந்து பயணத்தின்போது நடத்துநரைத் தன் அருகில் அமரச் செய்து, அவர்களின் பணிச் சூழல் மற்றும் தேவைகள் குறித்தும் முதல்வர் விஜய் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
