“அதிமுக-வுக்கு அடுத்த ஷாக்… விஜய் கட்சியில் இணைகிறாரா பண்ருட்டி எம்.எல்.ஏ?”… கடலூரில் வெடித்த அரசியல் பூகம்பம்….!

By SATHISH R on ஆனி 25, 2026

Spread the love

கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவிலும், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலும் தற்போது அரசியல் சலசலப்புகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. பண்ருட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடலூர் மாவட்ட அதிமுகவுக்குள் நிலவி வரும் கோஷ்டி பூசல்களுக்கு மத்தியில், தற்போதைய இந்த நகர்வு அக்கட்சியின் மாவட்ட அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவைப் பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கும், பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்திற்கும் இடையே நீண்டகாலமாக உட்கட்சி மோதல்கள் நீடித்து வந்தன. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எம்.சி.சம்பத் தவெகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார். அதன் பின், கட்சியைச் சீரமைக்கும் நோக்கில் எம்.சி.சம்பத்தின் அண்ணன் எம்.சி.தாமோதரன் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்திற்குப் பிறகும் அங்கு சுமுகமான சூழல் திரும்பவில்லை என்பதே தற்போதைய நிலவரம் காட்டுகிறது.

   

சமீபத்தில் புதிய மாவட்டச் செயலாளர் எம்.சி.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன் கலந்து கொள்ளாதது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து மோகனின் ஆதரவாளர்கள் தரப்பில் பேசுகையில், “மாவட்டத் தலைமை நடத்தும் எந்தவொரு முக்கிய நிகழ்ச்சிக்கும் தங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும், திட்டமிட்ட புறக்கணிப்பு காரணமாகவே சட்டமன்ற உறுப்பினர் இக்கூட்டங்களைத் தவிர்த்து வருகிறார்” என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

   

ஆனால், மாவட்டத் தலைமை வட்டாரங்களின் கருத்து முற்றிலும் வேறாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெகவிற்கு ஆதரவாகச் செயல்பட்ட பண்ருட்டி எம்எல்ஏ மோகனை, பெரும்பாலான அதிமுக மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் இன்னமும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பரஸ்பர நம்பிக்கையின்மை மற்றும் தொடர் புறக்கணிப்பு காரணமாகவே, மோகன் தனது எம்எல்ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையத் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பண்ருட்டி தொகுதியில் அதிமுக சார்பில் முதன்முறையாகப் போட்டியிட்டு வென்றவர் மோகன். எளிய பின்னணியில் இருந்து வந்து, ஜெயலலிதா மீதான விசுவாசத்தோடு முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கியவர் அவர். அன்று அவ்வளவு விசுவாசத்தோடு இருந்த மோகன், தற்போதைய உட்கட்சி அரசியல் நெருக்கடிகளால் தவெகவை நோக்கி நகர முற்படுவது கடலூர் மாவட்ட அதிமுகவிற்குப் பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. பண்ருட்டி எம்எல்ஏ மோகனின் அடுத்தகட்ட அரசியல் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.