தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 27 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, பரஸ்பர சம்மதத்துடன் பிரிவது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த ஜோசியர் ஒருவரின் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், விவாகரத்துக்கான செட்டில்மெண்ட் தொகைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வேட்புமனுவின்போது விஜய் தாக்கல் செய்த சொத்து பட்டியலின் அடிப்படையில், சங்கீதா தரப்பில் சுமார் 250 கோடி ரூபாய் வரை இழப்பீடு கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் உரியப் பங்கினை வழங்க வேண்டும் என சங்கீதா வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் நான்கில் ஒரு பங்கை அவர் எதிர்பார்த்த நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தகவல்களின்படி, மனைவி சங்கீதாவிற்கு மட்டும் 35 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் வழங்க விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகிய இருவரையும் தனது பொறுப்பிலேயே வளர்ப்பதற்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விஜய்யின் இந்த முடிவைச் சங்கீதா தரப்பும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவுகள் நாளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட உள்ளன.
கடந்த சில நாட்களாகவே சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்துப் பல்வேறு ஊகங்கள் எழுந்து வந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு இந்தப் பரபரப்பை உறுதிப்படுத்தியது. லண்டனில் பிறந்து விஜய்யின் தீவிர ரசிகையாகத் தனது பயணத்தைத் தொடங்கி, 1999-இல் விஜய்யின் வாழ்க்கைத்துணையான சங்கீதாவின் இந்தப் பிரிவு முடிவு, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை நீதிமன்ற விசாரணையில் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
