ரூ.400 கோடி வசூல் வேட்டை…. மாட்டிய அன்பில் மகேஷ்… மேஜையில் இருந்த 1-வது ஃபைலை தூக்கிய முதலமைச்சர் விஜய்…. அமைச்சர் நிர்மல்குமார் போட்ட குண்டு…..!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

தமிழகத்தில் “லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்” என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ள நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.400 கோடி வசூல் புகார் மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பள்ளிகளில் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் தன் மேஜையில் வைத்திருந்ததாகக் குறிப்பிட்ட 3 முக்கியக் கோப்புகளில், முதல் கோப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள், மிஷனரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை மிரட்டி ஒரே ஆண்டில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்குப் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாகக் குற்றம் சாட்டினார். குழந்தைகள் பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவதிலும் கூட ஊழல் நடந்துள்ளது வெட்கக்கேடானது என்றும், தற்போது பள்ளிகள் தைரியமாக வெளியே வந்து புகாரளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிமன்றமே வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி ஜாமீன் மறுத்துள்ள நிலையில், தவறு செய்யாதவர்கள் சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளத் தயங்குவது ஏன் என்றும், கோப்பைத் திறக்குமாறு சவால் விட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு இது ஒரு சோறு பதம் போன்ற நடவடிக்கை தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

அன்பில் மகேஷிடம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் திமுகவினர் கரூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வலியுறுத்தி டிராமா செய்வதாகக் குறிப்பிட்ட நிர்மல்குமார், செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள் திட்டமிட்ட பல மறைமுக உண்மைகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் எவராயினும் இந்த அரசு அவர்களைக் காப்பாற்றாது என்றும், சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

   

இதே செய்தியாளர் சந்திப்பில் தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையிலிருந்து 3 வார்டன்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளின் நிலை குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். தப்பிச் சென்ற கைதிகளில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 13 பேரைப் பிடிக்க தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் கூறினார். அதேபோல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மாணவன் அகிலன் தற்கொலை வழக்கிலும் யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது என்றும், இதில் எவ்விதச் சமரசமுமின்றி விசாரணைகள் மிக நேர்மையாக நடைபெறும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.