உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆறுதல் தேடும் குடும்பம்… இறுதியாக இறங்கி வந்த அரசு… நேரில் சென்று அமைச்சர் கொடுத்த உத்தரவு…!!

By Gayathri on ஐப்பசி 27, 2026

Spread the love

கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப் புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், உரிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், காவல்துறையின் விசாரணையில் திருப்தி இல்லை எனக் கூறியும் மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தை உணர்ந்த தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர், இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்கள், டைரி மற்றும் கோப்புகள் அனைத்தையும் காலதாமதமின்றி ஒப்படைக்குமாறு கோவை மாநகரப் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வழக்கை விசாரிக்கத் தனி அதிகாரி நியமிக்கப்பட்டதையடுத்து மாணவனின் குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொள்ள உடன்பட்டனர்.

   

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சம்பத்குமார் உயிரிழந்த மாணவனின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தமிழக அரசின் சார்பில் மாணவனின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணத் தொகைக்கான ஆணையும், அவரது சகோதரிக்கு ஆனைக்கட்டி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.