சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் திரைக்கு முன்னும், பின்னும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2017 ஆம் வருடம் முதலே கூட்டணியில் இருந்து வருகிறது. அதேபோல பாஜகவில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தலை போலவே தனித்து நிற்பதில் உறுதியாக உள்ளார் சீமான்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தேர்தல் களத்திற்கு புதிது. திமுக, பாஜகவோடு கூட்டணி அமைக்கமாட்டோம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது. அப்படி என்றால் அதிமுகவோடு விஜய் கூட்டணி அமைப்பாரா? என்று கேள்வி எழுந்தது அதற்கும் வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் நான்கு முனை போட்டி உறுதியாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் இலக்குடன், 2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான ‘MY TVK’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த செயலியில் அனைத்து தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
