தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகத்தில் மரதகம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அதிமுகவில் இருந்து விலகி உடனடியாக தவெகவில் இணைந்தவர்களுக்குத் சீட் வழங்கப்பட்டிருப்பது, கட்சியின் ஆரம்பகால நிர்வாகிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் தவெகவுக்கு சாதகமான சூழல் நிலவினாலும், தாராபுரம் தொகுதியில் எழுந்துள்ள எதிர்ப்புகள் ஆளும் தரப்பை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கவுண்டர் சமூக வாக்குகள் அதிகம் கொண்ட தாராபுரம் தொகுதியைக் கைப்பற்ற, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோரை பொறுப்பாளர்களாகத் தவெக தலைமை நியமித்துள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகளிலிருந்து விலகி வந்த வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிராக உள்ளூர் அளவில் கிளம்பியுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் திணறி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் செல்வாக்கு செலுத்தும் கவுண்டர் சமூக மக்கள் இன்னமும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்பதாகவும், மறுபுறம் பட்டியல் சமூக வாக்குகளை திமுக திறம்படப் பிரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சமூக ரீதியிலான வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாமல் தவெக தடுமாறி வருகிறது.
தொகுதி கணக்குகளின்படி, தாராபுரத்தில் உள்ள மொத்தம் 2.22 லட்சம் வாக்காளர்களில், 40 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வெறும் 76 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் தவெக இங்கு சுமார் 46 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. மாறாக, அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 41% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தற்போதைய இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெற வேண்டுமெனில், கடந்த தேர்தலை விட கூடுதல் 17% வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இளைய தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், சமூக ரீதியிலான ஆதரவு சுணக்கமடைந்துள்ளதும் தவெகவின் வெற்றி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த இரு தொகுதிகளின் முடிவுகளும் முதல்வர் விஜய்யின் அரசியல் பிம்பத்திற்கும், ஆட்சி நிலைப்புத்தன்மைக்கும் மிக முக்கியமான சோதனையாகப் பார்க்கப்படுகிறது. உள்ளூர் நிர்வாகிகளின் ஒத்துழைப்பின்மை மற்றும் வேட்பாளருக்கு எதிரான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தவெகவினர் நம்பிக்கையின்றிப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது தாராபுரத்தில் கரையேற, முதல்வர் விஜய்யின் நேரடிப் பிரச்சாரத்தையும் அவரது தனிப்பட்ட செல்வாக்கையும் மட்டுமே தவெக தலைமை முழுமையாக நம்பியிருக்கிறது.
