தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் திமுகவுக்கு பெரிய சவாலாக விஜய் மாறி உள்ளார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இணைந்த பிறகு நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் இணைந்த கையோடு மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்குள் கொண்டுவரும் பொறுப்பு இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
