கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு முறை ஆஜராகி விளக்கம் அளித்திருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று மூன்றாவது முறையாக விசாரணைக்காக டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். இதற்காக இன்று மதியம் 3 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் புறப்படத் தயாரானார்.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்தது கண்டறியப்பட்டது. விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால், அதிகாரிகள் அவரை உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், அந்த கத்தரிக்கோலைத் தன்னுடன் வந்த நபரிடம் ஒப்படைத்த விஜய், இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளிடம் கடிதம் ஒன்றையும் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்தச் சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக விஜய்யின் பயணம் சுமார் 20 நிமிடங்கள் தாமதமானது. அதன் பின்னரே அவர் தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். கரூரில் நிகழ்ந்த பெரும் சோகமான உயிரிழப்புகள் குறித்த வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த டெல்லி பயணம் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே உற்று நோக்கப்படுகிறது.
